Wednesday, February 17, 2010

பாவமன்னிப்புத் தேடுதல்!

அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் மிக முக்கிய அம்சமாகும். ஏனெனில் அவன் பாவமற்றவனாகவே அல்லாஹ்வை சந்திக்க முயல்வான். எந்த மனிதனும் பாவத்திலிருந்து தப்புவது சாத்தியமற்றது என்ற வகையில் பாவமன்னிப்புத் தேடலே இதற்கு சிறந்த வழியாகும். இந்த வகையில் பாவமன்னிப்புத் தேடல் என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட நிகழ்ச்சி நிரலின் ஒரு மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.

பாவமன்னிப்புத் தேடல் என்பது கடமையான ஓர் அம்சமாகும். பெரும் பாவங்களை கவலைப்பட்டு, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்காக இறைஞ்சாதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறாது பெரும் பாவங்களுடன் மரணிக்கும் முஸ்லிமின் நிலை மிகுந்த அபாயத்திற்குரியது. சிறு பாவங்கள் அன்றாட வணக்க வழிபாடுகளாலும், கஷ்டங்கள், துன்பங்களைப் பொறுமையாக ஏற்பதாலும் மன்னிக்கப்பட முடியுமாயினும், அவற்றிற்காகப் பாவமன்னிப்புக் கேட்டு விடுவதே சிறந்ததாகும். பாவமன்னிப்பின் போது சிறு பாவங்களை மன்னிக்குமாறு இறைதூதர் (ஸல்) அவர்கள் கேட்டுள்ளமை இதனைக் காட்டுகிறது.

"உங்களில் ஒருவன் பாலைவனத்தில் தனது ஒட்டகையைக் காணாமலாக்கி விட்டு பின்னர் அது கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதனை விட அல்லாஹ் தனது அடியான் பாவமன்னிப்புக் கோருவதால் சந்தோசமடைகிறான்" என‌ முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஆதார நூல்கள்: ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளைக்கு எழுபது முறைகளுக்கு மேல் பாவமன்னிப்பு கேட்டு மீள்கிறேன்" என‌ முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதார நூல்கள்: ஸஹீஹ் புஹாரி, முஸ்னத் அஹ்மத்.

பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே இவ்வாறு பாவமன்னிப்புக் கேட்டு வருவார்களாயின் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புக்கு உலக ரீதியான சில விளைவுகளும் உள்ளன என விளக்குகிறார்கள். அதனைக் கீழ்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.

"யார் பாவமன்னிப்பை தொடர்ந்து கைக்கொண்டவராக இருக்கிறாரோ, அல்லாஹ் அவரது அனைத்து கவலைகளுக்கும் தீர்வைக் கொடுக்கின்றான். அவர் நினைத்திராத புறத்திலிருந்து அவருக்கு வாழ்க்கை வசதியினை செய்து கொடுக்கின்றான்"

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத்.

தான் புரிந்த பாவங்கள் குறித்து மிகுந்த கவலைக் கொள்வதே பாவமன்னிப்புக் கேட்பதன் அடையாளமாகும். பாவமன்னிப்புக் கேட்பதற்கான வார்த்தைகள் உள்ளத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்போதுதான் அது சரியான பாவமன்னிப்புக் கேட்டலாகிறது.

No comments:

Post a Comment